நம்பியூர் அருகே காதலன் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை

நம்பியூர் அருகே காதலன் இறந்த சோகத்தில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2021-08-25 03:14 IST
நம்பியூர்
நம்பியூர் அருகே காதலன் இறந்த சோகத்தில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
நர்சு
நம்பியூர் அருகே உள்ள சின்னசெட்டியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன் (வயது 50).  விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மகள் மலர்கொடி (21). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருடன்  மலர்க்கொடிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. 
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில், கடந்த 20-ந் தேதி ரஞ்சித்குமார் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இதனால் மலர்கொடி ரஞ்சித்தையை நினைத்து மனமுடைந்து காணப்பட்டு வந்தார். மேலும் பொள்ளாச்சியில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டிலும் கவலையுடன் மலர்கொடி காணப்பட்டு வந்தார். கடந்த 22-ந்தேதி ரங்கன் மற்றும் அவருடைய மனைவி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மலர்கொடி மட்டும் இருந்தார். இந்த நிலையில் வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு மலர்கொடி தற்கொலை செய்து கொண்டார்.  
பெற்றோர் கதறல்
மாலை வேலை  முடிந்து 6 மணியளவில் வீட்டிற்கு வந்த ரங்கனும் அவரது மனைவியும் வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டி உள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது மலர்கொடி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த மலர்க்கொடியை இறக்கி பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. மகள் இறந்து கிடந்ததை கண்டு பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 
இதுகுறித்து மலர்க்கொடியின் தந்தை ரங்கன் கொடுத்த புகாரின் பேரில் வரப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்