விநாயகர் சிலை தயாரிப்பு குறைந்தது
கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை தயாரிப்பு குறைந்ததால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.;
பொள்ளாச்சி
கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை தயாரிப்பு குறைந்ததால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வீடுகள், வீதிகள் மற்றும் ரோட்டோரங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக பொள்ளாச்சி பகுதியில் ஆவல்சின்னாம்பாளையம், வடுகபாளையம், ஆர்.பொன்னாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு மற்றும் போதிய மண் கிடைக்காததால் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சிலை தயாரிப்பு குறைந்து விட்டது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
சிலை தயாரிப்பு குறைந்தது
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ½ அடி முதல் 2 ½ அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப் படுகிறது. ரூ.150 முதல் ரூ.2,500 ஆயிரம் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக பொள்ளாச்சி பகுதியில் 1000 விநாயகர் சிலைகள் வரை தயாரிக்கப்படும்.
கடந்த ஆண்டு கூடுதலாக சிலைகள் தயாரித்தும் விற்பனை இல்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு 80 சதவீதம் சிலை தயாரிப்பு குறைந்து உள்ளது. மேலும் வீட்டில் வைத்து வழிபடும் வகையில் தான் சிலைகள் தயாரிக்கிறோம்.
மண் எடுக்க அனுமதி
இதற்கு முன் விநாயகர் சதுர்த்தி என்றால் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைக்கு தான் அதிகமாக வரவேற்பு இருக்கும். ஆனால் தற்போது காகித கூழ் கொண்டு வித, விதமான உருவங் களில் பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலை தயாரிக்கப் படுகிறது. இவற்றை தான் குழந்தைகளும் விரும்புகின்றனர்.
இதனால் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை குறைந்து வருகிறது. கடந்த ஒராண்டுக்கு முன் கோத வாடி குளத்தில் மண் எடுக்க அனுமதி கிடைத்தது.
அந்த மண்ணை வைத்து தற்போது சிலைகளை தயார் செய்து வருகி றோம். கார்த்திகை பண்டிகைக்கு தீபம் தயாரிக்க மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.