ஈரோட்டில் ஆவின் கடை உரிமையாளர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை; தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு
ஈரோட்டில் ஆவின் உரிமையாளர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தொழில் நஷ்டத்தால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.;
ஈரோடு
ஈரோட்டில் ஆவின் உரிமையாளர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தொழில் நஷ்டத்தால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
தொழிலில் நஷ்டம்
ஈரோடு முத்துவேலப்பா வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 56). இவருடைய மனைவி பூங்கொடி (47). இவர்களுக்கு பிரனேஷ்குமார் (25) என்ற மகன் உள்ளார். இவர் என்ஜினீயராக உள்ளார். ராஜசேகர் ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் ஆவின் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வந்தார்.
மேலும் இவர் ஈரோடு பிரகாசம் வீதியில் ஸ்ரீ ராஜமுருகன் என்ற பெயரில் நிதி நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இதில் ராஜசேகரிடம் பணம் வாங்கியவர்கள் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, முறையாக பணம் செலுத்தவில்லை. இதனால் நிதி நிறுவன தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விஷம் குடித்து தற்கொலை
இதனால் மனம் உடைந்த அவர், தன்னுடைய மனைவியுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்று பிரனேஷ்குமார், சொந்த வேலை காரணமாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சென்றுவிட்டார். வீட்டில் இருந்த ராஜசேகரும், பூங்கொடியும் விஷம் குடித்துவிட்டு வாயில் நுரைதள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ராஜசேகரும், பூங்கொடியும் பரிதாபமாக இறந்தனர். இறந்த தம்பதியினரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.