வால்பாறையில் பெய்த மழையால் சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு;

Update:2021-08-28 22:04 IST
வால்பாறை

வால்பாறையில் பெய்த மழையால் சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

வால்பாறையில் மழை

வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. ஆனாலும் தமிழக-கேரள கடலோரங்களில் ஏற்பட்ட புயலின் காரணமாக வால்பாறை பகுதியில் பலத்த மழை பெய்தது. 

இதன் காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது.  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறையில் மழை இல்லாமல் வெயில் அடித்து வந்தது. இதன் காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால் 34 நாட்களாக முழு கொள்ளளவில் இருந்து சோலையார் அணையின் நீர்மட்டம் 159 அடியாக குறைந்தது. 

நீர்வரத்து அதிகரிப்பு 

தற்போது கடந்த 2 நாட்களாக  வால்பாறை வட்டார பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வால்பாறை பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. பசுந்தேயிலை உற்பத்தியும் அதிகரித்து உள்ளது.  மேலும், வனப்பகுதிகளையொட்டி பகுதிகளில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

இதன் காரணமாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1512 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மழையளவு

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- வால்பாறை- 34, சோலையார்- 59, நீரார்-42, மேல்நீரார்-41 மழையும் பதிவானது. இந்த நிலையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வால்பாறைக்கு வர அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. 

இதனால் தற்போதைய இதமான காலசூழ்நிலையை அனுபவிக்க வால்பாறை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்