அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு இலவச பதிவு முகாம்

அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு இலவச பதிவு முகாம்

Update: 2021-08-28 16:35 GMT
பொள்ளாச்சி

மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதற்கு புதிய இணையதளம் பெயரில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் தணிகவேல், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-
தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் இலவச பதிவு முகாம் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. நாட்டில் மொத்தம் 43.7 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்கள் உள்ளனர்.

 அவர்களை முறையாக கண்டறிந்து நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த பதிவினை செயல்படுத்தி வருகிறது. சிறு குறு வியாபாரிகள், விவசாய கூலிகள், குத்தகைதாரர்கள், கட்டுமான தொழிலாளர்கள், நெசவாளர்கள், தச்சு வேலை செய்பவர்கள், சவர தொழிலாளர்கள் உள்பட அமைப்பு சாரா தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

 இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு தகுதி 16 வயது முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். பதிவுகளின் அடிப்படையில் சமூக நலத்திட்டங்களை அரசு அமல்படுத்தும் பிரதமரின் ஆவாஸ் யோஜனா, சுரக் ஷா பீமா யோஜனா போன்ற சமூக நலத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு சந்தா விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்