கோவையில் 9 இடங்களில் கடைகள் அடைப்பு

கோவையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக 9 இடங்களில் கடைகள் அடைக்கப் பட்டன.

Update: 2021-08-29 16:33 GMT
கோவை

கோவையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக 9 இடங்களில் கடைகள் அடைக்கப் பட்டன. ஆனால் பெரியகடை வீதியில் கடைகள் திறந்து இருந்ததால் அங்கு பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவையில் கட்டுப்பாடுகள் 

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங் கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தளர்வுகள் கோவை மாவட்டத்தில் அமலுக்கு வந்தன. 

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் தொற்று பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகளை விதித்து கலெக்டர் சமீரன் உத்தர விட்டார். 

அதன்படி காந்திபுரம் 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி உள்பட 9 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கடைகளை திறக்கவும், பூங்காக்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

9 இடங்களில் கடைகள் அடைப்பு 

இந்த நிலையில்  ஞாயிற்றுக்கிழமை என்பதால், கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட காந்திபுரம் 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சார மேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி. இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய பகுதிகளில்  கடைகள் அடைக்கப்பட்டன. 

அதுபோன்று இந்த பகுதிகளில் இருக்கும் 9 டாஸ்மாக் கடை களும் மூடப்பட்டன. இதனால் இங்கு வந்த மதுபிரியர்கள், கடைகள் மூடப்பட்டதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினார் கள். 

இந்த 9 பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி கடைகள் வழக்கம்போல செயல்பட்டன. இதன் காரணமாக அந்த வழியாக குறைந்தளவில் வாகன போக்குவரத்து இருந்தது.

 காந்திபுரம் 5, 6, 7-வது வீதிகளில் செல்போன் விற்பனை உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டன.

பரபரப்பு

இந்த நிலையில் பெரியகடை வீதியில் கடைகள் அனைத்தும் திறந்து இருந்ததால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான துணி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க குடும்பத்தினருடன் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 பணியில் இருந்த போலீசார், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பொது மக்களை அறிவுறுத்தினார்கள். 

இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும்  பூங்காக்கள் திறக்கவில்லை. இதனால் பூங்காவுக்கு வந்தவர்கள் பலர் ஏமாற்றத்துடன் சென்றனர்.

 குறிப்பாக கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு செல்ல பலர் குடும்பத்துடன் வந்தனர். ஆனால் பூங்கா திறக்கப்படவில்லை என்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

மேலும் செய்திகள்