சட்ட விரோதமாக நடக்க இருக்கும் பொதுக்குழு கூட்டத்தை தடுக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மனு

சட்ட விரோதமாக நடக்க இருக்கும் பொதுக்குழு கூட்டத்தை தடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.;

Update:2021-09-01 03:35 IST
ஈரோடு
சட்ட விரோதமாக நடக்க இருக்கும் பொதுக்குழு கூட்டத்தை தடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
வீடு கட்ட மனை
ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். 
அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
எங்கள் சங்கத்தில் 807 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு சங்க தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்கள் தற்போது பொறுப்பாளர்களாக உள்ளனர். இவர்கள், வீடு கட்ட மனை வழங்கும் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி, சங்க உறுப்பினர்கள் 700 பேரிடம் தலா ரூ.70 ஆயிரம் வாங்கினார்கள். இதைத்தொடர்ந்து நசியனூர் பகுதியில் 20½ ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, சங்க அறக்கட்டளை ஏற்படுத்தி கிரயம் செய்யாமல், பொறுப்பாளர்கள் தங்களது பெயரிலும், தங்களது மனைவி பெயர்களிலும் கிரயம் செய்து கொண்டார்கள். இதுவரை சங்க உறுப்பினர்களுக்கு நிலம் வழங்கப்படவில்லை.
கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது
இதற்கிடையில் சங்கத்தின் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக சிலர் தேர்தல் பணிக்குழு என்ற பெயரில் இன்று (புதன்கிழமை) பொதுக்குழு கூட்டம்  நடத்த முடிவு செய்து, 
வியாபாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கோரி மிரட்டல் விடுத்து வருகிறார்கள். சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த தலைவர் மட்டுமே அதிகாரம் பெற்றவர் ஆவார்.
எனவே பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது. தற்போது கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில், பொதுக்குழு கூட்டினால் உறுப்பினர் களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்