கடத்தல் வழக்கில் கைதான போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
கடத்தல் வழக்கில் கைதான போலீஸ்காரர் பணியிடை நீக்கம்;
கோவை
சிவகங்கையை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 33). கார் டிரைவர். இவர் கடந்த சில மாதங்களாக திருப்பூரில் தங்கி இருந்து டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த வாரம் தாராபுரம் சென்றுவிட்டு காரில் திருப்பூர் திரும்பிக்கொண்டு இருந்தார். பல்லடம் அருகே கார் வந்தபோது, கார்களில் வந்த சிலர் மகேஸ்வரனை கடத்திச்சென்றனர்.
தங்க கடத்தலில் ஈடுபடும் கும்பல் முன்விரோதம் காரணமாக இவரை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, கடத்தப்பட்ட மகேஸ்வரனையும், அவருடைய நண்பர்கள் 2 பேரையும் மீட்டனர்.
இந்த கடத்தலில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் கோவை நகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனரின் கார் டிரைவராக பணியாற்றிய ராஜேஸ்வரன் (27) என்ற போலீஸ்காரரும் ஒருவர். சைபர் கிரைம் போலீசார் சிலரின் உதவியுடன், டிரைவர் மகேஸ்வரனின் செல்போன் அழைப்பு உள்ளிட்ட விவரங்கள், இருப்பிடம் போன்ற தகவல்களை எடுத்து கொடுத்து இந்த கடத்தலுக்கு உதவியது தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீசில் ராஜேஸ்வரன் தகவலை பெற்றது எப்படி? யாரெல்லாம் இதற்கு உடந்தையாக இருந்தனர் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக செல்போன் தகவல்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கைதான ராஜேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து, கோவை நகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் உத்தரவிட்டுள்ளார். மேலும் துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.