விமானத்தில் பரிசு பொருட்களை பார்சல் அனுப்புவதாக கூறி வாலிபரிடம் ரூ.85 ஆயிரம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

விமானத்தில் பரிசு பொருட்களை பார்சல் அனுப்புவதாக கூறி வாலிபரிடம் ரூ.85 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசாா் தேடிவருகின்றனா்.

Update: 2021-09-01 17:08 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் ஹசின்தாஹீர் மகன் முகமதுமுஹ்ஸின் (வயது 24). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் டேவிட் என்ற பெயருடைய நபர் முகநூல் மூலம் நண்பராக அறிமுகமாகி பழகி வந்துள்ளார். 

இந்நிலையில் அந்த நபர், முகமதுமுஹ்ஸினை வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு பரிசு பொருட்களை பார்சலில் அனுப்பியுள்ளதாகவும், டெல்லி சர்வதேச விமான நிலைய சுங்கவரி அலுவலகத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். 

இதை நம்பிய முகமதுமுஹ்ஸின், அந்த நபருக்கு 2 தவணையாக ரூ.35 ஆயிரமும், பார்சலில் உள்ள பணத்தை இந்திய ரூபாயாக மாற்றுவதற்கு ரூ.50 ஆயிரத்தையும் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு முகமதுமுஹ்ஸின் செலுத்தியுள்ளார். ஆனால் பரிசு பொருட்கள் அனுப்பாமல் அந்த மர்ம நபர் மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்