ஆபத்தை உணராமல் வெளியே விளையாடும் குழந்தைகள்

வால்பாறையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஆபத்தை உணராமல் குழந்தைகள் வெளியே சுற்றி விளையாடி வருகின்றன. எனவே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-01 17:30 GMT
வால்பாறை

வால்பாறையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஆபத்தை உணராமல் குழந்தைகள் வெளியே சுற்றி விளையாடி வருகின்றன. எனவே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

தேயிலை எஸ்டேட்டுகள்

வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் 8 பெரிய அளவிலான தேயிலை எஸ்டேட்டுகளும், 25-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான எஸ்டேட்டுகளும் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். 

தற்காலிக தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகங்கள் வாகன வசதிகள் செய்து கொடுத்து இருப்பதால் அவர்கள் வால்பாறை நகர் பகுதியை சுற்றியுள்ள இடங்களில் தங்கி இருந்து வேலைக்கு வருகிறார்கள். 

விளையாடும் குழந்தைகள் 

ஆனால் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் எஸ்டேட் பகுதி குடியிருப்பில் தங்கி இருந்து வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் பகல் நேரத்தில் வேலைக்கு சென்றுவிடுவதால் அவர்களின் குழந்தைகள் எஸ்டேட் பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் விளையாடி வருகிறார்கள். 

தற்போது வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. கரடிகள் தாக்கி ஒருவர் பலியானதுடன், 2 பேர் படுகாயமும் அடைந்து உள்ளனர். 

வனவிலங்குகள் நடமாட்டம் 

இந்த சூழ்நிலையில், தேயிலை தோட்டத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் குழந்தைகள் ஆபத்தை உணராமல் பாதுகாப்பு இல்லாமல் விளையாடி வருவதால், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:- 

வில்லோணி, நடுமலை எஸ்டேட் பகுதிகளில் கரடிகள் நடமாட் டம் அதிகரித்து இருக்கிறது. அத்துடன் குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலேயே காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தற்போது குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதால் அவர்கள் பகல் நேரத்தில் அங்குமிங்கும் சென்று விளையாடுகிறார்கள். 

பாதுகாப்பு வசதிகள் 

இதனால் எந்த நேரத்திலும் அவர்களை வனவிலங்குகள் தாக்கும் அபாயம் நீடித்து வருகிறது. எனவே இது தொடர்பாக குடியிருப்பு பகுதியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன் அங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பான இடங்களில் விளையாட தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்