தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
மதுரை, விருதுநகரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை
மதுரை, விருதுநகரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, விருதுநகர்
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர் ஆகிய பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளிலும் பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளில் கதவை உடைத்து வீட்டில் இருக்கும் பணம், நகை மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாகவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பகல் வேளைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பாரைப்பட்டியை சேர்ந்த ராஜாக்கனி(வயது 29), சுந்தரம் (32), சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி (31) ஆகியோர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ரூ.6 லட்சம்
மேலும், அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், 27 பவுன் நகை, 4 எல்.இ.டி. டி.வி.க்கள், 3 செல்போன்கள், லேப்டாப் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் ஆகியவை மீட்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை நேரில் அழைத்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டினார்.
மேலும், மதுரை மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்து உள்ளார்.