ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் ஏலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்

ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் ஏலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Update: 2021-09-01 20:50 GMT
மதுரை
மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த பிரகாஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்களை வாரச்சந்தை, தினச்சந்தை, மோட்டார் சைக்கிள்கள் வாகன காப்பகம் போன்றவற்றிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட்டை ஏலம் விடுவதற்கு அறிவிப்பு வெளியானது. அந்த ஏலத்தில் பங்கேற்க நான் விண்ணப்பித்தேன். இதற்காக குறிப்பிட்ட தொகையை வரைவோலையாக எடுத்து சென்றேன். ஆனால் அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்குத்தான் அங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட நபர்களுக்கு அந்த ஏலம் அளிக்கும் வகையில் அதிகாரிகளின் நடவடிக்கை இருந்தது.
இந்த அறிவிப்பு முறையாக விளம்பரப்படுத்தப்படவில்லை. எனவே இந்த ஏலத்தை ரத்து செய்து, புதிதாக விதிமுறைகளை பின்பற்றி ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஏலம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கப்படுகிறது. எனவே ஏலம் தொடர்பான ஆவணங்களை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்