கோவை
கோவையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா 2-வது அலை பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த மே மாதத்தில் மட்டும் தினமும் 4,800 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
அதில் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில் கொரோனா 3-வது அலை பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
எனவே கோவையில் கொரோனா 3-வது அலையை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, புதுசித்தாபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனரா?, சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று கேட்டு பதிவேட்டில் பெயர், விலாசம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, கோவையில் வீடு வீடாக சென்று சளி மாதிரிகளை சேகரிக்கும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் தொற்று பரவல் சங்கிலியை உடைக்க முடியும். 3-வது அலையை தடுக்க பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.