அம்மாபேட்டை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு; இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

அம்மாபேட்டை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டார்கள்.

Update: 2021-09-03 20:46 GMT
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்  மீட்டார்கள். 
கோவில் நிலம்
அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான வாகீஸ்வரர், சென்றாயப் பெருமாள், கரிய காளியம்மன் கோவில்கள் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்த கோவில்களுக்கு சுமார் 70 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்கள் தனிப்பட்ட நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்தது. இதனால், கடந்த 2013-ம் ஆண்டு கோவில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்பட்டது. 
கோர்ட்டில் வழக்கு
இந்தநிலையில் கோவில் நிலங்களில் விவசாயம் செய்தவர்கள் குத்தகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து குத்தகை செலுத்தாதோர் மீது கோவை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வந்தது. தாக்கல் செய்யப்பட்ட 6 வழக்குகளில் 4 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது.   இதில் கரியகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7.75 ஏக்கர் நிலமும், வாகீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.48 ஏக்கர் நிலத்தையும் கோவில் நிர்வாகம் கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 
நிலம் மீட்பு
இதையடுத்து கோவில் நிலத்தை மீட்கும் பணி நேற்று நடைபெற்றது. ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் அன்னக்கொடி, அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் தக்கார் சந்திரகலா, அந்தியூர் பிரிவு ஆய்வாளர் மாணிக்கம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர். 
முடிவில் ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் இதற்கான அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டன. கோவில் நிலம் மீட்பு பணியின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வெள்ளித்திருப்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

மேலும் செய்திகள்