கோபி அருகே, ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்யாததால் ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் கோரிக்கை மனு
கோபி அருகே, ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்யாததால் ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தார்கள்.;
கடத்தூா்
கோபி அருகே, ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்யாததால் ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தார்கள்.
தண்ணீர் திறப்பு
கோபி அருகே உள்ள தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக, கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி முதல் வருகிற செப்டம்பர் மாதம் 19-ந் தேதி வரை 120 நாட்களுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்மூலம் விவசாயிகள் இட்லி குண்டு, ஏ.எஸ்.டி. 16, பொன்னி, சம்பா உள்ளிட்ட நெல் வகை பயிர்களை நடவு செய்திருந்தனர்,
இந்தநிலையில் செங்கரை பகுதியில் தற்போது 120 நாள் பயிரான ஏ.எஸ்.டி. 16 ரக நெல் அறுவடை பணிகள் கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கி உள்ளது.
கொள்முதல் செய்யவில்லை
விவசாயிகள் வசதிக்காக அரசு சார்பில் நஞ்சைபுளியம்பட்டி, ஏளூர், கரட்டடிபாளையம், புதுவள்ளியாம்பாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செங்கரை பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் வகைகளை கரட்டடிபாளையத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது விவசாயிகள் கொண்டு சென்ற நெல் ரகங்கள் அரசு நிர்ணயம் செய்த 17 சதவீத ஈரப்பதத்துக்கும் மேல் இருந்ததால் நெல்லை கொள்முதல் செய்யாமல் வளாகத்திலேயே கொட்டி வைத்ததாக தெரிகிறது.
மேலும் கடந்த ஆண்டு நெல்லுக்கு நிர்ணயம் செய்த விலை பட்டியலை நெல் கொள்முதல் நிலையங்களில் திருத்தி, பழைய விலை பட்டியலை ஒட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோரிக்கை மனு
இதைத்தொடர்ந்து அரசு நிர்ணயம் செய்த 17 சதவீத ஈரப்பதத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
17 சதவீதத்துக்கும் அதிகமான ஈரப்பதம் கொண்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் அப்படியே கீழே கொட்டி வைக்கப்பட்டுள்ளன. தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லின் ஈரப்பதம் மேலும் கூடும். குறைய வாய்ப்பில்லை. தொடர்ந்து மழையில் நெல் நனைந்தால் வீணாக வாய்ப்புள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு அரசு உடனே தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.