சுற்றுலா தலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பு

வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.;

Update:2021-09-04 22:26 IST
வால்பாறை

வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறையில் இயற்கை எழில்கொஞ்சும் அழகுகளை ரசிக்கவும், சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்கவும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

 இந்தநிலையில் கொரோனா காரணமான சுற்றுலா தலங்கள் இழுத்து மூடப்பட்டன. தற்போது கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து சுற்றுலா தலங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

முகக்கவசம் அணிந்தவர்களுக்கு அனுமதி

அதன்படி வால்பாறை பகுதிக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை, நீரார் அணை, சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சென்றனர். 

இந்த சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் கணேசன் உத்தரவின் பேரில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி  வழங்கப்பட்டு முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே சுற்றுலா தலங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கோரிக்கை

அதே சமயம் வால்பாறை பகுதியின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்று பகுதிக்கு வந்தவர்களுக்கு எந்தவித உடல் வெப்ப பரிசோதனை, கைகழுவும் திரவங்கள் வழங்கப்படவில்லை.

தற்போது கல்லூரி, பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு மாணவ -மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் வால்பாறை பகுதியில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்