திண்டிவனத்தில் பரபரப்பு போலீஸ் போல் நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

திண்டிவனத்தில் போலீஸ் போல் நடித்து தனியார் நிறுவன ஊழியரிடம் 2 பேர் பணத்தை பறித்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-09-04 17:28 GMT
திண்டிவனம், 

சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் பூபாலன் (வயது 54). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திருமண அழைப்பிதழ் அச்சிடுவதற்கு பல்வேறு பகுதிக்கு சென்று ஆர்டர் எடுப்பது மற்றும் பணம் வசூலிப்பது போன்ற வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

 திண்டிவனம் பகுதியில் திருமண அழைப்பிதழ்களுக்கு முன்பதிவு செய்திருந்த 2 கடைகளில் பணம் வசூலிக்க  நேற்று மதியம் வந்தார். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.55 ஆயிரத்தை வசூலித்தார். பின்னர் வேறு ஒரு கடைக்கு செல்வதற்காக திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெரு, ரொட்டிகார தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்.

போலீஸ் போல் நடித்தனர்

அங்கு நின்று கொண்டிருந்த, 2 பேரில் ஒருவர் மிரட்டும் தோணியில் பூபாலனை அழைத்தார். எதற்காக அழைத்தீர்கள் என்று அவர்களிடம் பூபாலன் கேட்ட போது, நாங்கள் இருவரும் போலீஸ், நீங்கள் பையில் என்ன வைத்திருக்கிறீர்கள், கஞ்சா வைத்து இருக்கீறர்களா என்று கேட்டுள்ளனர்.

 அவர் இல்லை என்று கூறியும், அவரது பையை பெற்று சோதனை செய்தனர். அதில் ஒன்றும் இல்லை என்று தெரிந்தவுடன், பேண்ட் பையில் என்ன உள்ளது, என்று கேட்டனர். அப்போது தான் பணிபுரியும் நிறுவனத்துக்காக வசூலித்த பணம் வைத்துள்ளேன் என்று கூறினார்.

பணம் பறிப்பு

பணத்தை எடுத்து காண்பிக்குமாறு அவர்கள் கூறினர். இதையடுத்து பணத்தை அவர்களிடம் பூபாலன் காண்பித்தார். பணத்தை பெற்று பார்த்த அவர்கள், பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும் என்று கூறி அவரது பையில் வைத்து கொடுப்பது போன்று கொடுத்தனர். 

பணம் பையில் இருக்கிறது என்று நம்பி அங்கிருந்து பூபாலன் சென்றார். சிறிது தூரம் சென்ற பின் பையை பார்த்த போது அதில் பணம் இல்லை. அப்போது தான் பணத்தை பையில் வைப்பது போன்று நடித்து, அதை அவர்கள் பறித்து சென்று இருப்பது தெரியவந்தது. 

 பரபரப்பு

இதனால் அதிர்ச்சியடைந்த பூபாலன் இதுபற்றி திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசாரிடம், நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பேரில்,  அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, பார்த்தனர்.

அப்போது, பூபாலனிடம் பணம் இருப்பது பற்றி அறிந்தே அவரை மோட்டார் சைக்கிளில் தொப்பி அணிந்து படி 2 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ரொட்டிக்கார தெரு சந்திப்பில் வைத்து அவரிடம் விசாரித்துள்ளனர்.

 அப்போது தொப்பி அணிந்து இருக்கும் ஒருவர், பூபாலனுக்கு தெரியாமல் மற்றொருவரிடம் பணத்தை எடுத்து கொடுப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. 

 இந்த காட்சிகளின் அடிப்படையில்  போலீசார் விசாரணை நடத்தி, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்