கொடுமுடி அருகே விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது; பரபரப்பு தகவல்

கொடுமுடி அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-04 21:50 GMT
கொடுமுடி
கொடுமுடி அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொலை
கொடுமுடி அருகே உள்ள நாகமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 66). விவசாயி. சம்பவத்தன்று இவருடைய மாட்டுத்தொழுவத்துக்கு அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். 
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
தனிப்படை
மேலும் இந்த கொலையில் தொடர்புடையவரை விரைந்து பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொலையாளியை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். 
மேலும் செல்போனில் கோபால் கடைசியாக பேசிய நபர், அந்த பகுதியில்  இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள்  உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் புலன் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். 
வாகன சோதனை
இந்த நிலையில் நொய்யல் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவர் திண்டுக்கல் மாவட்டம் வெம்பாறைப்பட்டு சேடிப்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் சதீஷ்குமார் (22) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் கோபாலை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
வாலிபர் கைது
மேலும் போலீசார் அவரிடம் புலன் விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
 கரூரில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு சதீஷ்குமார் அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது அவருக்கும், கரூருக்கு வந்த கோபாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று போன் செய்து கோபால் அழைத்ததால் சதீஷ்குமார் கொடுமுடி பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது அங்குள்ள தோட்டத்தில் தகாத முறையில் கோபால் நடக்க முயன்றதாகவும், இதனால் ஆத்திரத்தில் பீர் பாட்டிலால் கோபாலை தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். விரைந்து செயல்பட்டு கோபாலை கொலை செய்தவரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பாராட்டினார். 

மேலும் செய்திகள்