மலைரெயில் நீராவி என்ஜின் மேட்டுப்பாளையம் வந்தது
மலைரெயில் நீராவி என்ஜின் மேட்டுப்பாளையம் வந்தது;
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை 7 நீராவி ரெயில் என்ஜின்களும் குன்னூரில் இருந்து ஊட்டி வரை 5 டீசல் என்ஜின் களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் உதிரி பாகங்கள் கிடைக்காததால் மலை ரெயில் சேவை அடிக்கடி பாதிக்கப் பட்டு வந்தது. எனவே நீலகிரி மலை ரெயிலுக்கு நிலக்கரி மூலம் இயங்கும் புதிய நீராவி ரெயில் என்ஜினை தயாரிக்க ரெயில்வேதுறை முடிவு செய்தது.
இதையடுத்து திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் நீராவி ரெயில் என்ஜின் தயாரிக்கும் பணி தொடங்கியது. இதையடுத்து பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களை கொண்டு ரூ.9 கோடியில் நீலகிரி மலை ரெயில் என்ஜின் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.
பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் இந்த ரெயில் என்ஜின் கடந்த 2-ந் தேதி டிரைலரில் ஏற்றப்பட்டு மேட்டுப்பாளையம் புறப்பட்டது. அது மேட்டுப் பாளையம் வந்தடைந்தது.
பின்னர் அதை இறக்கும் பணி நடந்தது. 2 கிரேன்கள் உதவியுடன் நீலகிரி மலை ரெயில் இணை இயக்குனர் (பாரம்பரியம்) சதீஷ் சரவணன், கோச் பொறியாளர்கள் முகமது அஸ்ரப், சுப்பிரமணி, ரெயில் நிலைய மேலாளர் பிரசன்னா ஆகியோர் மேற்பார்வையில், ரெயில் நிலையவளாகத்தில் உள்ள மலை ரெயில் பாதையில் இறக்கி வைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் ரெயில்வே பணிமனையில் புதிய ரெயில் என்ஜின் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு பின்னர் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நிலக்கரி மூலம் இயங்கும் நீராவி ரெயில் என்ஜின் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.