மதுரையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை

இலங்கையை சேர்ந்த 23 பேர் கைதான விவகாரத்தில் மதுரையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.;

Update:2021-09-06 02:15 IST
மதுரை,

மதுரை கப்பலூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 23 பேரை போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் கனடாவிற்கு கடல் வழியாக செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. மேலும், மதுரையைச் சேர்ந்த இடைதரகர்கள் தினகரன், அவரது மகன் அசோக்குமார் மற்றும் காசிவிஸ்வநாதன் ஆகியோர், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக 23 பேரையும் கடல் வழியாக தூத்துக்குடி அழைத்து வந்து, மதுரை கப்பலூரில் தங்க வைத்தும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இடைத்தரகர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இலங்கையைச் சேர்ந்த 23 பேர் தங்கியிருந்த கப்பலூர் பகுதியிலும், இடைத்தரகர்கள் வசித்து வரும் ரெயிலார் நகர் பகுதியிலும் விசாரணை நடத்தினர். சிறையில் உள்ள இடைத்தரகர்களை விசாரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்