பூஜை பொருள் கடையை அடித்து உடைத்த வழக்கில் பா.ஜ.க., இந்து முன்னணியினர் 7 பேர் கைது

பூஜை பொருள் கடையை அடித்து உடைத்த வழக்கில் பா.ஜ.க., இந்து முன்னணியினர் 7 பேர் கைது.;

Update:2021-09-06 11:21 IST
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள சங்குபாணி விநாயகர் கோவில் முன்பு 2 நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அரசு உத்தரவிடக்கோரி தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கோவில் அருகே பூஜை பொருட்கள் விற்கும் பூபதி (55) என்பவர் இந்து கடவுளான அத்திவரதர் படத்தை செருப்புக்குள் செருகி பூ வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இந்து முன்னணி, பா.ஜ.க.வினர் கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு கடையை அடித்து உடைத்தனர். இந்து முன்னணியினர் அளித்த புகாரின் பேரில் கடைக்காரரான பூபதியை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் பூபதியின் மனைவி கீதா பெரிய காஞ்சீபுரம் போலீசில் தனது கணவரை தாக்கியதாகவும், தங்கள் கடையை அடித்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளான காஞ்சீபுரத்தை சேர்ந்த ஜெகதீசன் (வயது 40), ஜீவானந்தம் (45), சந்தோஷ் (31), அதிசய குமார் (40), தேவதாஸ் (50), சதீஷ் (37), விஸ்வநாதன் (52) ஆகியோரை கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 10 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதையொட்டி 7 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்