அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

அமாவாசையையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2021-09-06 17:10 GMT
அமாவாசையையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. 
கோபி
கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாரதா மாரியம்மன் அருள்பாலித்தார். இதில் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் அம்மனை வழிபட்டு சென்றனர்.
இதேபோல் கோபி டவுன் அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. அமாவாசையையொட்டி இந்த கோவிலில் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
மேலும் கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவில், கொளப்பலூர் பச்சை நாயகி அம்மன் கோவில், பச்சைமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், மொடச்சூர் பால மாரியம்மன் கோவில் மற்றும் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்து மிகவும் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. அமாவாசையையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். எனினும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் கோவிலில் குறைவாகவே காணப்பட்டது. 
அம்மனை வணங்கிய பின்னர் பக்தர்கள் குண்டம் பகுதிக்கு சென்று அங்குள்ள சாம்பலை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர். மேலும் குண்டம் பகுதியில் உப்பு, மிளகு ஆகியவற்றை பக்தர்கள் தூவி அம்மனை வணங்கி சென்றனர்.
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. அமாவாசையையொட்டி இந்த கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பத்ரகாளியம்மன் அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு பட்டு உடுத்தி மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். 
இதேபோல் ஈஸ்வரன் கோவில், பேட்டை பெருமாள் கோவில், புதுப்பாளையம் குருநாதசாமி கோவில், ஆப்பக்கூடல் ஈஸ்வரன் கோவில் உள்பட அந்தியூர் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. 
சிவகிரி
சிவகிரி அருகே உள்ள வேட்டுவபாளையம்புத்தூர் அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். 
இதேபோல் சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில்களிலும் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. 
ஊஞ்சலூர் 
ஊஞ்சலூர் நாகேஸ்வர சாமி கோவில், மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவில் ஆகியவற்றில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.  

மேலும் செய்திகள்