மாத தவணையில் வீட்டு மனை பட்டா கொடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி

மாத தவணையில் வீட்டு மனை பட்டா கொடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் மனு கொடுத்தனர்.

Update: 2021-09-06 17:54 GMT
மாத தவணையில் வீட்டு மனை பட்டா கொடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் மனு கொடுத்தனர்.
மாத தவணையில்...
ஈரோடு ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். அவர், நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்து மாத தவணையில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்தார். இதன் காரணமாக நாங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை முன் பணமாக அவரிடம் கொடுத்தோம்.
இதைத்தொடர்ந்து அந்த நபர், எங்களுக்கு இடங்களை காண்பித்தார். இதனால் நாங்கள் அதனை நம்பி, அதன் பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அவரிடம் ரொக்கமாக பணம் செலுத்தினோம்.
பல லட்சம் ரூபாய் மோசடி
இதில், ஒவ்வொருவரும் அவர்களது இடத்தின் சதுர அடிக்கு தகுந்தாற்போல ரூ.2 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை செலுத்தியுள்ளோம். எங்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட அவர், இதுவரை எங்களுக்கு எந்த இடத்தையும் கிரயம் செய்து கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.
தற்போது அவர் தலைமறைவாகி விட்டார். மேலும், எங்களை போல 45 பேரிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு இதுபோன்று மோசடி செய்துள்ளார். எனவே, அவரை கண்டுபிடித்து, நாங்கள் செலுத்திய பணத்தை பெற்றுத்தர வேண்டும். மேலும், எங்களை ஏமாற்றிய அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்