தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்; 4 பேர் கைது

கடம்பூர் அருகே சரக்கு வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

Update: 2021-09-06 20:19 GMT
கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கடம்பூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், அதன் முன்னால் சென்று கொண்டிருந்த 2 மோட்டார்சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். பின்னர் சரக்கு வேனை சோதனை செய்தபோது அதில் 2 சாக்கு மூட்டைகளில் 54 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் சரக்கு வேனில் வந்தவர்கள் கர்நாடக மாநிலம் காஜனூரை சேர்ந்த பட்டா (வயது 33), ஜல்லிபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (28) என்பதும், இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம் நல்லூரில் இருந்து அந்தியூருக்கு சரக்கு வேனில் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும், மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் அந்தியூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்த பிரகாஷ் (22), முத்துக்குமார் (22) ஆகியோர் என்பதும், இவர்கள் புகையிலை பொருட்களை வாங்குவதற்காக சரக்கு வேன் முன்னால் சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள், சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்