பணம் வைத்து சூதாடிய 21 பேர் கைது

தாளவாடி அருகே பணம் வைத்து சூதாடிய 21 பேர் கைது செய்யப்பட்டார்கள். மேலும் 3 கார்களுடன் ரூ.1¼ லட்சத்த பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-06 20:37 GMT
தாளவாடி அருகே கெட்டவாடி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தாளவாடி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராசப்பன், தனி பிரிவு காவலர் ராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது ஒரு தோட்டத்து வீட்டில் சூதாட்டம் நடப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது தோட்டத்து வீட்டில் 21 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டம் நடத்தி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் சிலர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அங்குள்ள கொங்கள்ளி கோவிலுக்கு சென்று விட்டு கெட்டவாடி அடுத்த மல்லையன்புரம் பகுதியை சேர்ந்த சுப்பப்பா (வயது 60) என்பவர் தோட்டத்து வீட்டுக்கு வந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் விசாரணையில் அவர்கள் நஞ்சன்கூடு பகுதியை குருசாமி (42), நாகேந்திரா (36), கிருஷ்ணா (28) அனில் (31), கார்த்திக் (34) திலீப் (28), சுப்பப்பா உள்பட 21 பேர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 21 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 860-யை பறிமுதல் செய்தனர். அவர்கள் வந்த 3 கார்கள், ஒரு சரக்கு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் என 5 வாகனங்கள் மற்றும் 19 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்