500 ஆண்டுகள் பழமையான பங்களா கோர்ட்டு சீரமைப்பு பணிகள் மும்முரம்

பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூரில் 500 ஆண்டுகள் பழமையான பங்களா கோர்ட்டு உள்ளது. இதை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.;

Update:2021-09-08 23:35 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூரில் 500 ஆண்டுகள் பழமையான பங்களா கோர்ட்டு உள்ளது. இதை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

பங்களா கோர்ட்டு

பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூரில் 500 ஆண்டுகள் பழமையான நுழைவு வாயில் உள்ளது. இதை பொதுமக்கள் பங்களா கோர்ட்டு என்று அழைத்து வருகின்றனர். 

இந்த நுழைவு வாயிலில் லாரி மோதியதால் இருபுறமும் இருந்த தூண்கள் சேதமடைந்தன. இதையடுத்து அதை சீரமைக்கும் பணியில் பொதுமக்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கோமங்கலம்புதூரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நுழைவு வாயில் உள்ளது. இந்த நுழைவு வாயில் கட்டிடம் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு கட்டப்பட்டதை போன்று உள்ளது. 

அந்த காலத்தில் கோமங்கலம்புதூருக்கு வருவதற்கு வேறு வழி எதுவும் கிடையாது. இந்த வழியாக மட்டும் தான் வர முடியும். நுழைவு வாயில் வருவோர் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபடுவது வழக்கம்.

சினிமா படப்பிடிப்பு

இந்த நுழைவு வாயிலின் ஒருபுறம் பஞ்சாயத்து தலைவர்களும், ஒருபுறமும் தவறு செய்தவர்களை நிறுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. 

இதனால் அந்த நுழைவு வாயில் பங்களா கோர்ட்டு என்று அழைக்கின்றனர். இங்கு நடிகர் ரஜினிகாந்த் நடித்த வள்ளி திரைபடம் மற்றும் மம்முட்டி நடித்த மலையாள படத்திற்கும் படப்பிடிப்பு நடந்து உள்ளது.

இங்கு மார்கழி, புரட்டாசி, கிருஷ்ண ஜெயந்தியின் போது வீதி உலா நடைபெறும். அப்போது பெருமாளை இந்த மேடையில் வைத்து தான் பஜனை பாடல்கள் பாடி வழிபாடு செய்வது நடைமுறையில் உள்ளது. 

பழுதடைந்த தூண்களுக்கு பதிலாக புதிதாக தூண்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக நாகர்கோவிலில் இருந்து தூண்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதை தொடர்ந்து பங்களா கோர்ட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான நிதியை பொதுமக்கள் திரட்டி வருகின்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்