வனக்கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக தர்ணா

வனக்கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக தர்ணா

Update: 2021-09-09 16:31 GMT
வனக்கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக தர்ணா
மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. 

கோவை தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டுப்புழு வியல் துறை பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது இதில் மாணவ-மாணவிகள் 80 பேர் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் 2021 -2022 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் பட்டு புழுவியல் துறையில் 2 ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.இதனால் பட்டுப்புழுவியல் துறை மாணவ-மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்று அச்சம் மாணவர்களிடையே ஏற்பட்டது. 

எனவே 2021-2022 ஆம் கல்வியாண்டில் பட்டுப்புழுவியல் துறையை இணைத்து மாணவர்களை சேர்க்கக் கோரியும், பட்டுப்புழு வியல் துறையை கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வனக்கல்லூரி பட்டுப்புழு வியல் துறை மாணவ-மாணவிகள் நேற்று  முன்தினம் முதல் வகுப்புக்களை புறக்கணித்து துறை கட்டிட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் விடிய,விடிய தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நேற்று 2-வதுநாளாக தொடர் தர்ணா போராட்டத்தை தொடங்கினார்கள். இதனையடுத்து வனக்கல்லூரி முதல்வர் கே.டி பார்த்திபன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முதல்வர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளுடன் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆனால் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத மாணவ-மாணவிகள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்று கூறினர். இது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்