ஐகோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்

ஐகோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்என்றுமதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-09 17:27 GMT
மதுரை,

சிவகங்கையை சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல வழக்குகள், ஆட்கொணர்வு மனுக்கள் மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நாள்தோறும் விசாரிக்கப்படுகின்றன.இதுபோன்ற பல்வேறு வழக்குகள் தாமதமின்றி விரைவாக முடிக்கப்பட போதிய அரசு வக்கீல்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.தற்போது சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளில் 202 அரசு வக்கீல்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போது பணியில் இருக்கும் அரசு வக்கீல்கள் கூடுதலாக பணியாற்றும் நிலை உள்ளது. இதனால் வழக்குகளை விரைவாக முடிப்பது என்பது சிரமமான காரியமாக உள்ளது.எனவே சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளில் காலியாக உள்ள அரசு வக்கீல் மற்றும் அரசு கூடுதல் வக்கீல், சிறப்பு அரசு வக்கீல் உள்ளிட்ட காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கொரோனா தொற்று காலமாக இருப்பதாலும், கோர்ட்டில் காணொலி காட்சி மூலமாக விசாரணை நடந்து வருவதாலும் அரசு வக்கீல் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்