மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் மீட்பு

பொள்ளாச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

Update: 2021-09-09 17:39 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தற்கொலை மிரட்டல் 

பொளளாச்சி பழைய தாலுகா அலுவலகம் அருகே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு (எண்-2) செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில்  வக்கீல்கள் மற்றும் விசாரணைக்கு வந்தவர்கள் என பலர் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று அந்த வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் விரைவாக ஏறினார். பின்னர் அதன் கிளை ஒன்றில் துண்டை கட்டி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். 

அத்துடன் அவர் தனக்கு உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டார்.

தீயணைப்பு துறையினர் மீட்டனர் 

இதன் காரணமாக கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் மற்றும் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

பின்னர் அவர்கள் அந்த வாலிபரை சமாதானம் செய்து கீழே இறங்க வைத்து மீட்டனர். 

பின்னர் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர், பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டணத்தை சேர்ந்த அமுக்கான் என்கிற மணிகண்டன் (வயது 35) என்பதும் குடிபோதையில் மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்