இன்று 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்று 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

Update: 2021-09-11 17:17 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் 1,475 இடங்களில் இன்று நடைபெறும் முகாம் மூலம் 1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கண்காணிப்பு அதிகாரி சங்கர் கூறினார்.

கண்காணிப்பு அதிகாரி ஆலோசனை

கோவை மாவட்டத்தில் 1475 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதற்காக நியமிக்கப் பட்ட கண்காணிப்பு அலுவலரும், காதி மற்றும் கதர் கிராமிய வாரிய தலைமை செயல் அலுவலருமான சங்கர் நேற்று கோவை வந்தார்.

பின்னர் அவர், கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்பட அனைத்து துறை அலுவலர்களுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து கண்காணிப்பு அலுவலர் சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது

1475 இடங்களில் முகாம்

கோவை மாவட்டத்தில் ஊரக பகுதியில் 1167 இடங்களிலும், மாநகராட்சி பகுதியில் 308 இடங்களிலும் என மொத்தம் 1475 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7மணி வரை கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது. 

ஒரு முகாமில் தடுப்பூசி செலுத்துபவர், கணினி பதிவாளர், 2 உதவியாளர்கள் என 4 பேர் வீதம் 5900 நபர்கள் பணியாற்ற உள்ளனர். 

ஒவ்வொரு முகாமிலும் முதியோர்,  மாற்றுத்திறனாளிகளுக்கு தனிபிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 38 லட்சத்து 67 ஆயிரத்து 926 ஆகும். இதில் 27 லட்சத்து 7 ஆயிரத்து 550 பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

 இதுவரை 22 லட்சத்து 3 ஆயிரத்து 34 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 75 ஆயிரத்து 837 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 27 லட்சத்து 78 ஆயிரத்து 871 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

1½ லட்சம் பேர்

இதுவரையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 லட்சத்து 5 ஆயிரத்து 516 பேர். தற்போது 2-வது தவணை கோவிஷீல்டுக்கு காத்திருப்பவர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 785 பேர், கோவேக்சின் தடுப்பூசிக்கு 46 ஆயி ரத்து 196 என 1 லட்சத்து 91 ஆயிரத்து 981 பேர் உள்ளனர். 

இன்று நடைபெறும் பிரமாண்ட முகாம்கள் மூலம் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கண்காணிப்பு அலுவலர் சங்கர், தடுப்பூசி மையங்களான புலியகுளம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, உப்பிலிபாளை யம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வ.உ.சி மைதானம் ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்