கோவையில் 352 விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவையில் 352 விநாயகர் சிலைகள் கரைப்பு

Update: 2021-09-11 17:22 GMT
கோவை

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் 352 விநாயகர் சிலைகள்  குளங்களில் நேற்று கரைக்கப்பட்டன. இதில், தடை உத்தரவை மீறியதாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி

கொரோனா பரவலை தடுக்க, அரசு அறிவித்த கட்டுப்பாடுகளின் படி விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட்டது.

 3 அடி உயரத்துக்கு மிகாத விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், தனி நபர்கள் வீடுகளில் பிரதிஷ்டை செய்த சிலைகளை குளங்களில் கரைக்கவும் அனுமதிக்கப்பட்டது. 

கோவை நகரில் வீடுகள் மற்றும் கோவில் பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடந்த 2 நாட்களாக கரைக்கப்பட்டு வருகின்றன. 

குறிச்சிகுளம், முத்தண்ணன் குளம், குனியமுத்தூர் குளம், சரவணம் பட்டி சின்னதம்பி குட்டை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கோவை நகரில் இதுவரை 352 விநாயகர் சிலைகள் குளங்களில் கரைக் கப்பட்டு உள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 7 சிலைகள் கரைக்கப் படுகிறது என்றனர்.

15 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை சுண்டபாளையம் ரோடு, சுந்தராபுரம்- குறிச்சிகுளம், காந்திமாநகர் மைதானம், கணபதி பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் தடையை மீறி பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து, கரைப்பதற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம், போத்தனூர், சரவணம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இந்து அமைப்புகளை சேர்ந்த நந்தகுமார், சபரிகிரீஷ், கிருஷ்ணகுமார், உமாபதி, ரகு உள்ளிட்ட 15 பேர் மீது தடையை மீறுதல், தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்