கூழாங்கல் ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
வால்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், காய்கறி சந்தைகளில் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள், விவசாயிகள் அவதி அடைந்தனர்.;
வால்பாறை,
வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நள்ளிரவில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது. ஆனால் பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி முதல் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்யத் தொடங்கியது. பின்னர் 4 மணி அளவில் கனமழையாக கொட்டித்தீர்த்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வாழைத்தோட்டம் மற்றும் நடுமலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீர் கரையோரத்தில் இருந்த வீடுகளை தொட்டு சென்றது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் அதிகாலை முதல் அதிகஅளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் கொண்டேயிருந்ததால் வால்பாறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்திருந்தனர்.
கூழாங்கல் ஆற்றில் நிமிடத்திற்கு நிமிடம் தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டேயிருந்ததால் அதிக ஆர்வத்துடன் கூழங்கல் ஆற்றில் இறங்கி குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் யாரையும் போலீசார் ஆற்றில் இறங்கி குளிக்க அனுமதிக்கவில்லை.
மேலும் ஆற்றில் குளிக்க தடை விதித்து சுற்றுலாப்பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி கூழாங்கல் ஆற்றை ரசித்தனர். மேலும் மழையில் குடை பிடித்தப்படி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடமாடும் ஏ.டி.எம்.யில் பணம் எடுத்தனர்.
குறிப்பாக வால்பாறையில் உள்ள சந்தை பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக வியாபாரங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அவதிப்பட்டனர். மேலும், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கனமழை காரணமாக வாங்க முடியாமல் திரும்பிச்சென்றனர்.
வால்பாறை அண்ணாநகர் பகுதியில் ஏற்கனவே கடந்த மாதம் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு பிச்சைமுத்து என்பவரின் சமையலறை பகுதியின் மீது மண்சரிந்து விழுந்து வீடு சேதமடைந்தது. மேலும் மழைநீர் வீட்டுக்குள் புகுந்தது. மண் சரிவு ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் இல்லை.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வால்பாறை 31, சோலையாறு அணையில் 37, மேல்நீராரில் 43, கீழ் நீராரில் 60.
இதேபோல் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.கடந்த முறை பருவமழை போதியஅளவு கிணத்துக்கடவு பகுதியில் பெய்யாததால் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்தனர். தற்போது பெய்யக்கூடிய சாரல் மழை விவசாயிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
இதனால் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி, தரிசு நிலத்தில் பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து கிணத்துக்கடவு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் கிணத்துக்கடவு பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.