தற்கொலைகளை தடுக்க ஆலோசனை மையம்

தற்கொலைகளை தடுக்க ஆலோசனை மையம்

Update: 2021-09-14 15:16 GMT
கோவை

தற்கொலைகளை தடுக்க கோவையில் 24 மணி நேரமும் செயல்படும் ஆலோசனை மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

ஆலோசனை மையம்

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 'விடியல்' என்ற பெயரில் தற்கொலைகளை தடுக்க ஆலோசனை வழங்கும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 

இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் நேற்று குத்துவிளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

இதில் உளவியல் ஆலோசனைகளை பெற 0422-2300999 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதையடுத்து அவர் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு குறும்பட சி.டி. வெளியிட்டார்.

இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் நிருபர்களிடம் கூறியதாவது

தற்கொலை

இயற்கை மரணம் மற்றும் தற்கொலையை 174 என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். கோவை மாவட் டத்தில் தற்கொலை அதிகரித்து வருகிறது. 

நடப்பாண்டில் 174 சட்டப் பிரிவின் கீழ் இதுவரை 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

இதில் 480 தற்கொலை வழக்குகள் ஆகும். இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அதிகம்.

தற்கொலை செய்தவர்களில் 40 சதவீதம் பேர் குடும்ப பிரச்சினை, 25 சதவீதம் பேர் உடல் நலக்குறைவு, சிலர் கடன்தொல்லை, வேலை இழப்பு காரணமாக தற்கொலை செய்து உள்ளனர். 

தற்கொலைகளை தடுக்க கோவை மாவட்டத்தில் விடியல் என்ற ஆலோசனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

24 மணி நேரம் செயல்படும்

இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 8 போலீசார் பணியில் இருப்பார்கள். இதற்காக பயிற்சி பெற்ற 80 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். 

கடந்த ஆண்டு 11 குழந்தைகளும், நடப்பாண்டில் இதுவரை 5 குழந்தைகளும் தற்கொலை செய்து உள்ளனர். சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக 'விடியல்' என்ற பெயரை தேர்வு செய்த பேரூர் போலீஸ் நிலைய பெண் போலீஸ் உமாவுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கி பாராட்டினார்.


மேலும் செய்திகள்