காஞ்சீபுரம் மாவட்டத்தில் 435 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 435 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெறும் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக காஞ்சீபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றியங்களுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 2-வது கட்டமாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களுக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்களர்களின் விவரம் வருமாறு:-
காஞ்சீபுரம் ஒன்றியத்தில் 51 ஆயிரத்து 127 ஆண் வாக்காளர்கள், 54 ஆயிரத்து 705 பெண் வாக்காளர்கள், 12 இதர வாக்காளர்களும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 50 ஆயிரத்து 710 ஆண் வாக்காளர்கள், 54 ஆயிரத்து 831 பெண் வாக்காளர்கள், 7 இதர வாக்காளர்களும், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 50 ஆயிரத்து 993 ஆண் வாக்காளர்கள், 53 ஆயிரத்து 423 பெண் வாக்காளர்கள் மற்றும் 7 இதர வாக்காளர்களும் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 44 ஆயிரத்து 387 ஆண் வாக்காளர்கள், 48 ஆயிரத்து 964 பெண் வாக்காளர்கள், 11 இதர வாக்காளர்களும், குன்றத்தூர் ஒன்றியத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 49 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 38 ஆயிரத்து 464 பெண் வாக்காளர்கள் மற்றும் 41 இதர வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 266 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 50 ஆயிரத்து 387 பெண் வாக்காளர்கள் மற்றும் 78 இதர வாக்காளர்கள் என மொத்தம் 6 லட்சத்து 81 ஆயிரத்து 731 வாக்காளர்கள் உள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,281 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இதில் மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட 347 வாக்குச்சாவடிகளும், மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட 88 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 435 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒன்றியங்களின் விவரங்களாவது:-
காஞ்சீபுரம்-137, வாலாஜாபாத்-69, உத்திரமேரூர்-53, ஸ்ரீபெரும்புதூர்-66, குன்றத்தூர்-22, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட குன்றத்தூர் பகுதியில் 88 என மொத்தம் 435 வாக்குச்சாவடிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை கண்காணிக்க தாசில்தார் தலைமையில் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
வாக்குப்பதிவு பணிக்காக மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 433 அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இதில் முதற்கட்ட தேர்தலுக்கு 5 ஆயிரத்து 659 அரசு ஊழியர்களும், 2-ம் கட்ட தேர்தலுக்கு 4 ஆயிரத்து 774 அரசு ஊழியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை 044-27237680 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.