பவானி அருகே ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி- மகன்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க முயன்றபோது பரிதாபம்
பவானி அருகே மகன்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க முயன்றபோது ஆற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.;
பவானி
பவானி அருகே மகன்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க முயன்றபோது எலக்ட்ரீசியன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஆற்றில் இழுத்து செல்லப்பட்டார்
ஈரோடு மாவட்டம் பவானி ஜம்பையை அடுத்துள்ள துருசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சந்தோஷ் (10), பூபேஷ் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மகன்கள் 2 பேரும் நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பினர். இதைத்தொடர்ந்து அவர்களை சக்திவேல் வைரமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து சென்றார்.
அப்போது ஆற்றில் ஒரு வாழை மரம் மிதந்து வந்ததை பார்த்தார். இதனால் சக்திவேல் மகன்களிடம் அந்த வாழை மரத்தை பிடித்து அதன் மூலம் உங்களுக்கு நீச்சல் கற்று தருகிறேன் என்று கூறி தண்ணீரில் குதித்தார். தற்போது பவானிசாகர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சக்திவேல் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
பிணமாக மீட்பு
இதைப்பார்த்த மகன்கள் 2 பேரும், “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் இதுபற்றி பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, ஆற்றில் குதித்து சக்திவேலை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் சக்திவேல் உடல் அவர் குதித்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் செடிகளுக்கு இடையே சிக்கி கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் இதுபற்றி பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மகன்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க முயன்றபோது தந்தை ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.