வாலிபரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

வாலிபரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-19 11:19 GMT
துண்டிக்கப்பட்ட தலை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 23), இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து வெற்றிவேலின் தாயார் வெற்றிவேல் காணவில்லை என சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன அன்று இரவு தர்காஸ் தேவாலயம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தலை மட்டும் இருப்பதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தலையை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தலை துண்டிக்கப்பட்ட உடலை போலீசார் நடுவீரப்பட்டு தர்காஸ் பகுதி அருகே ஏரிக்கரையோரம் முட்புதர் பகுதியில் கிடந்த உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

6 பேர் கைது

இந்த கொலை குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. வெற்றிவேல் கொலை வழக்கு தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதில் 6 பேர் குற்றவாளி என தெரியவந்தது. நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 27), லாரன்ஸ் (28), ரிஷிகேஷ் (25), மதிவாணன் (25) முகமது அலி (28), வினோத் (34) ஆகியோரை சோமங்கலம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த ஆண்டு அபிஷேக் என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்