சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால் சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.;
கிணத்துக்கடவு
கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால் சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
தொற்று அதிகரிக்கும் அபாயம்
தமிழக&கேரள எல்லையில் கோவை மாவட்டம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், கேரளாவில் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்திலும் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்து உள்ளது.
இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையில் கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூரில் சோதனை சாவடி இருக்கிறது. இங்கு கேரளாவில் இருந்து வாகனங்களை போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பிறகே கோவை மாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் கோவையில் இருந்து செல்பவர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இரவு, பகலாக...
இது மட்டுமின்றி வாகனங்களில் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்று, இ-பதிவு ஆகியவை இருந்தால் மட்டுமே கோவை மாவட்டத்துக்குள் நுழைய முடியும். இல்லையென்றால் போலீசார் அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. எனினும் போலீசார், வருவாய்த்துறையினர், உள்ளாட்சித்துறையினர், சுகாதாரத்துறையினர் தங்களது பணியை முறையாக மேற்கொண்டு வருகின்றனர்.
வீரப்பகவுண்டனூர் மட்டுமின்றி ரங்கேகவுண்டனூர், சின்னாக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளிலும் போலீசார் இரவு, பகலாக பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.