மழை நீர் வடிகாலுடன் சாலை அமைக்கக்கோரி வழக்கு

மதுரை நகரில் மழை நீர் வடிகாலுடன் சாலை அமைக்கக்கோரி வழக்கு

Update: 2021-09-20 21:10 GMT
மதுரை
மதுரையை சேர்ந்த சுரேஷ்குமார்ஐசக்பால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் அமைக்கப்பட்ட சாலைகள் குறுகிய நாட்களிலேயே சேதம் அடைந்துவிடுகின்றன. மேலும் சாலைகள் அமைக்கப்படும்போது மழைநீர் செல்வதற்கான வழிகளை சரியான முறையில் அமைப்பதில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையோரம், கழிவுநீர் வாய்க்காலில் மணல், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் தேங்கி காற்று மாசுபாடு அதிக அளவில் ஏற்படுகிறது.
அதேபோல் சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை அப்புறப்படுத்தாமல் அதன்மேல் புதிய சாலைகள் அமைக்கப்படுகிறது. இதனால் மதுரையில் கடந்த 30 ஆண்டுகளில் சாலையின் உயரம் 50 மடங்கு அதிகரித்துள்ளது.
எனவே மதுரை நகரில் சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை அப்புறப்படுத்தவும், சாலைகளின் இருபுறமும் மழைநீர் வடிகால் ஏற்படுத்தவும், சாலை பணிகளை மேற்கொள்ளும் காண்டிராக்டரின் விவரங்கள் அடங்கிய பலகைகள் ஆங்காங்கே அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில் இந்த வழக்கு குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள், மதுரை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 6 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்