பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர வேண்டும் ஈரோட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேட்டி
பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஈரோட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.;
ஈரோடு
பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஈரோட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஈரோடு சம்பத்நகரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநகர செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருப்பு கொடிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழை நாடாக மாறும்
ஒன்றிய அரசு செயல்படுத்தும் திட்டம் இந்திய பொருளாதாரத்தை சரிவை நோக்கி செல்லும் பாதையாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய தயாராகி வருகிறது. இந்தியாவின் பலமே பொதுத்துறை நிறுவனங்கள் தான். அதிலும் அதிக லாபத்தை ஈட்டி வரும் எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ஒரு சிலரை முன்னேற்றும் திட்டமாக தெரிகிறது. இந்தநிலை தொடர்ந்தால், உலகிலேயே ஏழை நாடாக இந்தியா மாறிவிடும்.
3 வேளாண் சட்டங்களுக்கும் எதிராக ஒரு வருடமாக விவசாயிகள் ரோட்டில் போராடி வருகிறார்கள். அவர்களை சந்திக்க பிரதமர் முன்வரவில்லை. கியாஸ் விலை உயர்வு காரணமாக ஏழை மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மீண்டும் விறகுகளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஜி.எஸ்.டி.
தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைத்தாலும், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சுங்கச்சாவடி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. காலாவதியான சுங்க சாவடிகளை மூடுவதற்கு தமிழக முதல்-அமைச்சர் மூலமாக அமைச்சர் வலியுறுத்தியும் ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை.
ஜி.எஸ்.டி. மூலமாக தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வேலை இல்லாத திண்டாட்டம் உருவாகி உள்ளது. பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவதற்கு தொடர்ந்து வலியுறுத்துவோம். கடந்த ஆட்சியின்போது பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது. இதனை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடன் தள்ளுபடி செய்வதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது.
நீட் தேர்வு
நீட் தேர்வு மூலமாக மாநில கல்வி பட்டியலை ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றுவதற்காக முயற்சி நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி பிரதமராக இருந்தபோது மாநில சுயாட்சிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார். அவர் பிரதமரான பிறகு மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுகிறார். தமிழகத்தில் கல்வித்தரம் சிறப்பாக உள்ளது. எனவே நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை. ஒன்றிய அரசு நினைத்தால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியும்.
இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.