சத்தியமங்கலம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது-10 லிட்டர் சாராயம், 25 லிட்டர் ஊறல் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். மேலும் 10 லிட்டர் சாராயத்தையும் 25 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்தார்கள்.

Update: 2021-09-21 22:10 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். மேலும் 10 லிட்டர் சாராயத்தையும் 25 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்தார்கள். 
அரிசி மூட்டைக்குள் சாராயம்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புதுவடவள்ளி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் தனிப்படையினர் புதுவடவள்ளி பகுதியில் சந்தேகத்தின் பேரில் மலர்க்கொடி என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். 
அப்போது வீட்டில் இருந்த அரிசி மூட்டையில் சாராய பாட்டில்கள் புதைத்து வைத்திருந்ததையும், அருகே இருந்த குப்பைமேட்டில் சாராய ஊறல் புதைத்து வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தார்கள். 
2 பேர் கைது
மொத்தம் 10 லிட்டர் சாராயமும், 25 லிட்டர் ஊறலும் இருந்தது. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தார்கள். போலீஸ் விசாரணையில் மலர்கொடி, அவருடைய கணவரின் தம்பி மகேந்திரன், அக்காள் மகன் கனகராஜ் ஆகியோர் சேர்ந்து வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதை பாட்டில்களில் அடைத்து திருட்டுத்தனமாக விற்றுக்கொண்டு இருந்தது தெரிந்தது. 
இதையடுத்து மலர்கொடியும், மகேந்திரனும் கைது செய்யப்பட்டார்கள். போலீசார் சோதனை செய்ய வீட்டுக்குள் நுழையும்போதே கனகராஜ் தப்பி ஓடிவிட்டார். அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். 
கைது செய்யப்பட்ட மலர்கொடியும், மகேந்திரனும் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். 

மேலும் செய்திகள்