தவறி விழுந்த சேவலை காப்பாற்ற 100 அடி கிணற்றுக்குள் இறங்கிய வாலிபர் மேலே ஏற முடியாமல் தவிப்பு- தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்
தவறி விழுந்த சேவலை காப்பாற்ற 100 அடி கிணற்றுக்குள் இறங்கிய வாலிபர் மேலே ஏற முடியாமல் தவித்தாா். அவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.;
கடத்தூர்
கோபி அருகே உள்ள கொட்டையகாட்டூர் இட்டேரி தோட்டத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது 27). இவர் ஒரு சேவல் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த சேவல் அந்த பகுதியில் இருந்த 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. கிணற்றில் 2 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. தண்ணீரில் சேவல் தத்தளித்தபடி இருந்தது. மேய்ந்துகொண்டு இருந்து சேவலை காணவில்லை என்று கோகுல் தேடிக்கொண்டு இருந்தார். அப்போது கிணற்றை அவர் எட்டிப்பார்த்தார். தண்ணீரில் சேவல் தத்தளிப்பது தெரிந்தது. உடனே சேவலை காப்பாற்ற வேண்டும் என்று அவர் 100 அடி கிணற்றுக்குள் இறங்கினார்.
பின்னர் சேவலை பிடித்து கை இடுக்கில் வைத்துக்கொண்டு மேலே ஏற முயன்றார். அவரால் முடியவில்லை. நீண்ட நேரம் முயன்றும் கிணற்றுக்குள் இருந்து ஏற முடியாததால் பயந்துபோய் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அங்கு சென்று அப்பகுதி மக்கள் கோகுல் கிணற்றுக்குள் தவிப்பதை பார்த்து உடனே கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கோகுலையும், சேவலையும் பத்திரமாக மீட்டார்கள்.