வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து அமைச்சர் ஆய்வு
வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து அமைச்சர் ஆய்வு;
ஊட்டி
ஊட்டி அரசு மேல்நிலை பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கற்பித்தல் முறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
வகுப்பறையில் அமைச்சர் ஆய்வு
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவரை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் நரேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊட்டி அரசு மேல் நிலைப் பள்ளிக்கு நேற்று திடீரென்று சென்று ஆய்வு செய்தார்.
அவர், அங்கு மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி உள்ளதா? என்றும், கணினி பயிற்சி கூடத்தை பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் முறைகளை ஆய்வு செய்வதற்காக வகுப்பறைக்கு சென்று மாணவர்களோடு, மாணவ ராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருக்கையில் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்தும் முறையை கவனித்தார்.
இதையடுத்து கொரோனா சூழலில் மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்கிறார்களா? எளிமையான நடைமுறையில் பாடம் கற்பிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் உடனிருந்தார்.
இருக்கையில் அமர்ந்தார்
மாணவர்கள் அணிந்திருந்த உல்லன் ஆடை போல் அமைச்சரும் ஆடை அணிந்து இருக்கையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதனால் மாணவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதன்பிறகு அமைச்சருடன் அரசு பள்ளி ஆசிரியர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மேலும் 3 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர், பள்ளிகளில் கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
பள்ளிகளில் தொற்று உறுதியானால் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.