மாட்டை கடித்துக்கொன்ற சிறுத்தை
தாளவாடி அருகே மாட்டை சிறுத்தை கடித்துக்கொன்றது.;
தாளவாடி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வீரதப்பா (வயது 65). விவசாயி. இவரது மானாவாரி நிலம் ஊரையொட்டி உள்ளது. இங்கு அவர் நேற்று காலை தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மாலையில் வீட்டுக்கு ஓட்டி வர சென்றார்.
அப்போது அதில் ஒரு மாட்டை காணவில்லை. இதனால் அந்த மாட்டை அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். அப்போது அவரது மாடு அருகில் இருந்த ஓடையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் அருகே சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்தது. மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு அருகே உள்ள ஓடை பகுதிக்கு தண்ணீர் குடிக்க சென்றுள்ளது. அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை, அந்த மாட்டை கடித்து கொன்றது தெரியவந்தது. உடனே இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையின் கால்தடத்தை உறுதி செய்தனர். சிறுத்தை மாட்டை கடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதி பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. எனவே அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டுவைத்துபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.