அம்மாபேட்டை பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு

அம்மாபேட்டை பகுதியில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

Update: 2021-09-28 14:53 GMT
அம்மாபேட்டை பகுதியில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். 
வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மேட்டூர் வலது கரை வாய்க்கால் தண்ணீரை நம்பி விவசாயம் செய்யும் நிலங்களும், குளம் மற்றும் கிணற்று நீரை நம்பி விவசாயம் செய்யும் நிலங்களும் உள்ளன. 
தற்போது மேட்டூர் வலது கரை வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 
பயிர்கள் நன்றாக...
இதைத்தொடர்ந்து விவசாயிகள் உழவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு   வருகிறார்கள். இதேபோல் குளம் மற்றும் கிணற்று தண்ணீரை மட்டும் நம்பி இருக்கும் மேட்டு நிலப்பகுதி விவசாயிகள் வாழை, மஞ்சள், கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை, எள், ஆமணக்கு, வெங்காயம், போன்ற பயிர்களை பயிரிட்டு உள்ளனர். தற்போது பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகின்றன. 
இந்த நிலையில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான யூரியா உரம் அம்மாபேட்டை பகுதியில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. 
தட்டுப்பாடு
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. யூரியா ஒரு மூட்டை ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நுண்ணூட்ட உரம் 10 கிலோ கொண்ட டப்பா 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் யூரியா வாங்க முடியாமல் நாங்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளோம். எனவே யூரியா உரம் தங்கு தடையின்றி எங்களுக்கு கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 

மேலும் செய்திகள்