4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-09-29 21:53 IST
பொள்ளாச்சி

கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

பொள்ளாச்சி அருகே கெடிமேடு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.

மேலும் வாகனத்தில் பின்புறம் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியை சேர்ந்த டிரைவர் முரளி (வயது 45) என்பதும், 80 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 4 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை சேகரித்ததாகவும், பின்னர் அவற்றை மூட்டை கட்டி மொத்தமாக கேரளாவுக்கு கடத்த கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை அம்பராம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த நவீன் சேகரித்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தவிர கடத்தல் வாகனம் பாலக்காட்டை சேர்ந்த சதாம் என்பவருக்கு சொந்தமானது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முரளியை கைது செய்தனர். மேலும் சரக்கு வாகனத்துடன் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள நவீன், சதாம் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்