முழு கொள்ளளவில் நீடிக்கும் சோலையாறு அணை

வால்பாறையில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவில் நீடிக்கிறது.;

Update:2021-09-30 20:57 IST
வால்பாறை

வால்பாறையில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவில் நீடிக்கிறது. 

சேலையாறு அணை

வால்பாறை அருகே சோலையாறு அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 160 அடியாகும். இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் மூலம் வால்பாறை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த மே மாதம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்யத்தொடங்கியது. இதையடுத்து தென்மேற்கு பருவமழை தொடங்கி வால்பாறையில் கனமழை கொட்டித்தீர்த்தது. 

முழுகொள்ளளவில் நீடிப்பு

மேலும், தமிழக -கேரள கடலோர மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக வால்பாறை பகுதி முழுவதும் கனமழை இடைவிடாமல் பெய்தது. இந்த மழை காரணமாக 81 நாட்களில் பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை ஜூலை 23-ந் தேதி தாண்டியது. அன்று முதல் நேற்று வரையில் தொடர்ந்து சோலையாறு அணை தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. 2 முறை அணையின் நீர்மட்டம் 159 அடியானது. ஆனாலும் ஒரிரு நாளில் மீண்டும் 160 அடியை எட்டியது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து ஒருவாரத்திற்கும் மேலாக நல்ல வெயில் அடித்தது. இதனையடுத்து தற்போது கடந்த 2 நாட்களாக வால்பாறை பகுதி முழுவதும் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மாலையில் மட்டும் லேசான மழை பெய்தது. 

விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு

மேலும் அணையில் இருந்து உபரிநீர் அதிகஅளவில் வெளியேற்றப்படுகிறது. இதனால் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி அணைகளுக்கும் வால்பாறை பகுதியில் பெய்த மழையால் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆழியாறு அணையும் நிறைந்து வருகிறது. 
இதனால் அந்த அணையில் இருந்து தண்ணீர் விவசாயத்திற்கு திறக்கப்பட்டது. தற்போது வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக பகலில் பனிமூட்டமும், இரவில் குளிரும் நிலவுகிறது.

மேலும் செய்திகள்