டாஸ்மாக் பார் உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு 5 பேர் கைது

பொள்ளாச்சியில் டாஸ்மாக் பார் உரிமையாளரை கடத்தி பணம் பறித்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-09-30 22:22 IST
பொள்ளாச்சி


பொள்ளாச்சியில் டாஸ்மாக் பார் உரிமையாளரை கடத்தி பணம் பறித்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

டாஸ்மாக் பார் உரிமையாளர்

பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 46). இவர் திப்பம்பட்டியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். இந்த நிலையில் சிவகங்கையை சேர்ந்த ராஜா (30) என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை வாங்கி கொண்டு சதீஷ்குமார் பாரை வாடகைக்கு விட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் கொரோனா காரணமாக பார் மூடப்பட்டதால் வருமானம் இல்லை. இந்த நிலையில் ராஜா மற்றும் அவரது நண்பர்களான சிவகங்கையை சேர்ந்த கருப்புசாமி (35), கண்ணன் (39), சிவக்குமார் (35), ஈஸ்வரன் (36) ஆகியோர் பார் எடுத்து நடத்தலாம் என்று காரில் பொள்ளாச்சிக்கு வந்தனர்.
பின்னர் சதீஷ்குமாரிடம் நல்ல வருமானம் உள்ள பாரை எடுத்து தரும்படி கேட்டனர். அதற்கு சதீஷ்குமார் ஆச்சிப்பட்டியில் ஒரு பார் இருக்கிறது, அங்கு சென்று பார்க்கலாம் என்று கூறினார். இதையடுத்து ஒரு காரில் சதீஷ்குமார், ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர். காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று சதீஷ்குமாருக்கும், ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ராஜா, அவரது நண்பர்கள் சேர்ந்து சதீஷ்குமாரை தாக்கினர்.

5 பேர் கைது

பின்னர் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம், நகை மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கோவை ரோடு தில்லை நகரில் வாகன சோதனை நடத்திய போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.அப்போது காரில் ராஜா, அவரது நண்பர்கள் கருப்புசாமி, கண்ணன், சிவக்குமார், ஈஸ்வரன் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும்போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்