ரூ.19 லட்சம் இழப்பை ஏற்படுத்தியவருக்கு 13 ஆண்டு சிறை

'சிம்' கார்டுகளை வாங்கி மணிக்கணக்கில் பேசி பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.19 லட்சம் இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்தவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2021-09-30 21:41 GMT
நாகர்கோவில்:
'சிம்' கார்டுகளை வாங்கி மணிக்கணக்கில் பேசி பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.19 லட்சம் இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்தவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

மணிக்கணக்கில் பேசினார்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியை அடுத்த திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரித்துரை (வயது 41). இவர் கடந்த 2003-ம் ஆண்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு செல்போன் கடையில் 2 பி.எஸ்.என்.எல். போஸ்ட் பெய்டு (மாத தவணை மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டது) சிம் கார்டுகள் வாங்கினார். பின்னர் அந்த சிம் கார்டுகளை 2 மாதங்கள் வரை பயன்படுத்தினார். அப்போது ஒவ்வொரு 'சிம்' கார்டில் இருந்தும் அவர் மணிக்கணக்கில் பேசியுள்ளார். அந்த வகையில் மொத்தம் ரூ.19 லட்சத்துக்கு பேசினார்.
இதை தொடர்ந்து 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் மாத தவணை செலுத்த வேண்டி வந்தது. எனவே மாரித்துரையை பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தொடர்பு கொண்டு தொகையை செலுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் செலுத்தவில்லை. பின்னர் சில நாட்கள் கழித்து அவரை  தொடர்பு கொள்ள முடியவில்லை.
ரூ.19 லட்சம் மோசடி
இதனால் சந்தேகம் அடைந்த பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மாரித்துரையின் வீட்டுக்கு சென்று விசாரிக்க முடிவு செய்தனர். அதன்படி மாரித்துரை 'சிம்' கார்டுகள் வாங்குவதற்காக கொடுத்த முகவரிக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சென்றனர். அப்போது மாரித்துரை கொடுத்த முகவரி தவறானது என்று தெரியவந்தது. மேலும் அவர் சிம் கார்டுகள் வாங்குவதற்காக கொடுத்த ஆவணங்களும் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மாரித்துரை போலியான ஆவணங்களை கொடுத்து காவல்கிணறு முகவரியில் ஒரு சிம் கார்டும், சென்னை முகவரியில் மற்றொரு சிம் கார்டும் வாங்கிய தகவல் வெளியானது.
பின்னர் போலி ஆவணங்களை பயன்படுத்தி 'சிம்' கார்டுகள் வாங்கி ஏமாற்றியதோடு, ரூ.19 லட்சம் கட்டாமல் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நெல்லை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ராஜூ என்பவர் புகார் அளித்தார்.
13 ஆண்டு ஜெயில்
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் மாரித்துரை கைது செய்யப்படவில்லை. பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில், மாரித்துரை போலி ஆவணங்களை கொடுத்து 'சிம்'கார்டுகள் வாங்கி இருந்தாலும் அந்த ஆவணங்களுடன் சேர்த்து தனது ஒரிஜினல் புகைப்படத்தை இணைத்தது தெரியவந்தது. இதன் மூலம் சி.பி.சி.ஐ.டி. துரித நடவடிக்கை மேற்கொண்டு மாரித்துரையை கைது செய்து நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை நீதிபதி கெங்காராஜ் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாரித்துரைக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்