திருமணமான 3 மாதத்தில் கணவரை கொன்று கிணற்றில் வீசிய மனைவி கைது

புதுக்கோட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் கணவரை கொன்று கிணற்றில் வீசிய மனைவி கைது செய்யப்பட்டார

Update: 2021-10-02 19:59 GMT
ஆதனக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள போரம் கிராமத்தில் வசித்து வந்தவர் குஞ்சப்பன் மகன் பாண்டித்துரை(வயது 30). கூலித்தொழிலாளியான இவருக்கும், கறம்பக்குடி அருகே உள்ள மாங்கான்கொல்லப்பட்டியை சேர்ந்த நந்தினிக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணவாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கிய அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி பாண்டித்துரை காணாமல் போனார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் மீனாட்சி, மருமகளிடம் பாண்டித்துரை எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு நந்தினி, கடைக்கு போய் விட்டு வருவதாக கூறிச் சென்றவர் திரும்ப வரவில்லை என்று கூறியுள்ளார். அவரது பதிலில் திருப்தி அடையாத மீனாட்சி, கடந்த 28-ந் தேதி ஆதனக்கோட்டை போலீசில் தனது மகனை காணவில்லை என்று புகார் அளித்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாண்டித்துரையை தேடி வந்தனர்.
கிணற்றில் பிணம்
இந்தநிலையில் நேற்று நந்தினியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், சம்பவத்தன்று பாண்டித்துரைக்கும், நந்தினிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாண்டித்துரை, நந்தினியை கையால் தாக்கி கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் வீட்டில் உள்ள அரிவாளை எடுத்து வந்து அதன் பின்புறத்தால் கணவரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த பாண்டித்துரை சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
பின்னர், என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிய நந்தினி ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கணவரின் உடலை இழுத்து சென்று அங்குள்ள உறை கிணற்றில் வீசி விட்டு முட்செடிகளை மேலே போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல வீட்டிற்கு வந்து விட்டதாக வாக்குமூலம் கொடுத்ததாக தெரிவித்தனர். 
மனைவி கைது
அவர் கொடுத்த தகவலின்பேரில், புதுக்கோட்டை டவுன் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தலைமையில் கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கந்தர்வகோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் கிணற்றில் வீசப்பட்ட பாண்டித்துரையின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நந்தினி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். திருமணமான 3 மாதத்தில் குடும்ப தகராறில் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் ஆதனக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்