ஈரோட்டில் மழை பள்ளங்களில் தேங்கிய வெள்ளம்; கொப்பளித்து வெளியேறிய பாதாள சாக்கடை கழிவுகள்; பாட்டில்கள், பாலித்தீன் பைகளால் தண்ணீர் ஓடுவதில் தடை

ஈரோட்டில் பெய்த மழையால் பள்ளமான இடங்களில் வெள்ளம் தேங்கியது. பாதாள சாக்கடை திட்ட தொட்டிகளில் இருந்து கழிவுகள் கொப்பளித்து வெளியேறின. பாட்டில்கள் பாலித்தீன் பைகள் அடைத்துகொண்டதால் தண்ணீர் ஓடுவதில் தடை ஏற்பட்டது.;

Update:2021-10-03 02:52 IST
ஈரோடு
ஈரோட்டில் பெய்த மழையால் பள்ளமான இடங்களில் வெள்ளம் தேங்கியது. பாதாள சாக்கடை திட்ட தொட்டிகளில் இருந்து கழிவுகள் கொப்பளித்து வெளியேறின. பாட்டில்கள் பாலித்தீன் பைகள் அடைத்துகொண்டதால் தண்ணீர் ஓடுவதில் தடை ஏற்பட்டது.
ஈரோட்டில் மழை
ஈரோட்டில் மழை என்பது அபூர்வமான விஷயம். எப்போதாவது ஒரு மழை பெய்து விட்டால் கூட ஈரோடு மாநகரம் தாங்காது என்பது கடந்த வாரத்தில் 2 நாட்கள் பெய்த மழை நிரூபித்து காட்டியது. இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் மீண்டும் மழை கொட்டியது. சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த மழையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் வெள்ளம் தேங்கியது.
மழை வெள்ளத்துக்கு போட்டியாக பல இடங்களில் பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவுகள் கொப்பளித்து வெளியேறின.
ஈரோடு குமலன்குட்டை அருகே அம்பாள் கார் ஷோரூம் அருகே மழை வெள்ளம் குளம்போல தேங்கியது. தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் பெருகிய அந்த பகுதியில் வாகன போக்குவரத்தும் மிகவும் மெதுவாகவே நடந்தது. இங்கு பெருகிக்கிடந்த தண்ணீரையும் தாண்டி, அங்குள்ள பாதாள சாக்கடை திட்ட தொட்டியில் இருந்து கழிவுநீர் கொப்பளித்து வெளியேறியது. மழை நீர் சாக்கடை கலந்து கருப்பு நிறத்தில் தேங்கியது. இதனால் நடந்து சென்றவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
அடைப்பு
இதுபோல் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்ட தொட்டிகளில் இருந்து கழிவுநீர் சாலைகளில் பாய்ந்தோடியது. சில இடங்களில் மழை நீர் பாதாள சாக்கடை திட்ட குழாய் வழியாக புகுந்து வெளியேறியது. இது தூய்மையான தண்ணீர் போன்று ஓடியதால், அந்த பகுதிகளில் சிறுவர்கள் கால் நனைத்து ஆபத்துடன் விளையாடினார்கள்.
மழையின் போது மழைநீர் வடிகாலில் பாய்ந்து சென்ற தண்ணீர், ஆங்காங்கே அடைப்புகள் காரணமாக ரோடுகளில் பொங்கி பெருகியது. அப்போது குடிமகன்கள் மதுக்குடித்து விட்டு வீசிய காலி பாட்டில்கள் (குப்பிகள்), கடைகள், வீடுகளில் இருந்து பொதுமக்கள் வீசிய பாலித்தீன் பைகள், மக்காத கழிவுகள் ஆங்காங்கே தடுத்ததால் மழை நீர் ஓட்டம் தடை பட்டது. அந்த கழிவுகள் அனைத்தும் சாலைகளில் பரந்து கிடந்தன. கண்ணாடி பாட்டில்களில் வாகனங்களின் டயர்கள் ஏறி, அவை உடைந்து பாதசாரிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தின.
தடுமாற்றம்
ஈரோட்டில் குப்பைக்காடு, வீரப்பன்சத்திரம், மூலப்பட்டறை, சென்னிமலைரோடு ரெயில்வே சரக்கு முனையம் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கியது. காளைமாடு சிலை அருகே உள்ள ரெயில்வே நுழைவு பாலம், சென்னிமலை ரோடு ரெயில்வே நுழைவுபாலம், வெண்டிபாளையம் புதிய நுழைவு பாலம், பழைய நுழைவுபாலம், வ.உ.சி.பூங்கா சந்தை என்று முக்கிய பகுதிகளில் தண்ணீர் வடிந்து செல்ல வாய்ப்பு இல்லாமல் குட்டையாக தேங்கியது.
பாதாளசாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டு மீண்டும் ரோடு போடப்படாத பகுதிகள் சேறும் சகதியுமாக மாறியது. பாதசாரிகள் மட்டுமின்றி, 2 சக்கர வாகனங்களில் சென்றவர்களும் தடுமாறினார்கள். ஏற்கனவே கடந்த 2 நாட்களாக மழை காரணமாக பாதிப்பு அடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் செய்ய முடியாமலும் பொதுமக்கள் திணறினார்கள்.
மழை பெய்தால் மகிழ்ச்சி என்ற நிலை மாறி ஈரோடு மாநகர மக்கள் வெளியே செல்லவே அச்சப்படும் நிலை உருவாகி இருக்கிறது. தொடர் மழை காரணமாக இரவில் குளிர் காற்று வீசியது மட்டுமே சற்று ஆறுதலான விஷயமாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்